Powered By Blogger

Wednesday, 5 January 2022

சிறுகதைகள் தொகுப்பு

படித்ததில்  பிடித்தது-
*இங்க் பேனா* - சுஜாதா

ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.

நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"

வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? 
 12/= ரூபாய்.) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!

சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில்  தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகப்
படுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப் படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும். 
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது.  ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம்  தொலைத்துவிட்டோம். 

*நான் ரசித்தது பிறர் ரசிக்க*🙄

For Sujatha fans👆👍

சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்

*சுகவாசிகளின் சேலம்*
சேலம் வாசிகள் சுகவாசிகள். அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பாருங்களேன்; மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் இருந்ததால் அனைத்து பழைய பெரும் நடிகர்களும் நடிகைகளும் சேலத்தைத் தங்கள் தாய்வீடாகவே கொண்டாடினார்கள். கண்ணதாசன் முதல் கலைஞர் வரை, எம்ஜிஆர் முதல் ஜெய்சங்கர் வரை இவர்கள் அத்தனை பேரையும் ஆரம்ப காலத்தில் போஷித்து வளர்த்து விட்டது இங்கிருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ். R S மனோகருக்கு சேலம் என்ற நினைவு வந்தாலே சிரத்தின் மேல் கைகூப்பி வணங்குவார். சேலத்தின் மீது இருந்த பக்தியினால் தன் ஒவ்வொரு புதிய நாடகத்தையும் ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியில் அரங்கேற்றுவார். சொல்லி வைத்தது போல் ஒவ்வொரு நாள் மாலையிலும் மழை கொட்டும்.
மலபார் ஹோட்டலில் பாதாம் ஹல்வா நெய் சொட்டச் சொட்ட ஒண்ணார்ரூபாய்க்குக் கண்ணாடித் தாளில் சுற்றித் தருவார்கள். சின்னப் பிள்ளை போல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் துளித்துளியாக அது தீர்ந்து போகாத வண்ணம் சாப்பிடலாம். எந்த ஹோட்டலிலும் இனிப்பு வாங்கினாலும் கைப்பிடி மிக்ஸரோ,பூந்தியோ வைப்பார்கள். இனிப்பு திகட்டக் கூடாதாம். சேலம் டிஃபன் என்று நினைத்தாலே பாவ்லோவ்வின் நாய் போல நாவில் நீர் ஊறும். எத்தனை வகை!! வெள்ளையப்பம் என்று ஒரு பதார்த்தம். சேலத்தில் மட்டுமே கிடைக்கும். தற்போதைய பணியாரம் சற்றே உசில மணி அளவுக்கு பெரிதானால் அதுதான் வெள்ளையப்பம். சுடச்சுட இலையில் பக்க வெஞ்சனங்களுக்கு நடுவே அது வரும்போது மகாராணி பல்லக்கில் வருவது போல இருக்கும். அதன் உள்ளே முழிச்சு முழிச்சு கடலைப்பருப்பும் தேங்காய்ப் பல்லும் இரண்டொரு மிளகும் கறிவேப்பிலையும் நாவில் தட்டுப்படும் போது மெய் மறந்து கண்கள் சொருகி ஒரு விதமாய் ஆகிவிடும்.
அதைவிடுங்கள். சினிமாவுக்கு என்று கிளம்பி விட்டால் கவலையே கிடையாது. ஏனென்றால் தியேட்டர்கள் வரிசையாக அடுத்தடுத்து இருக்கும். ஒன்றில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்ததில் கிடைக்கும். அவர்களுக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருக்கும். ஒரு தியேட்டரில் படம் ஆரம்பித்த பிறகுதான் அடுத்ததில் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். இதில் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று: நமக்கும் டிக்கெட் கிடைக்கும். இரண்டு: அவர்களுக்கும் மொக்கைப் படமாக இருந்தாலும் கூட்டம் சேரும். சேலத்தில் ஓடாத படம் எப்போதும் இருந்ததில்லை.
காஃபி விஷயத்துக்கு வருவோம். எங்கேயாவது கியூவில் நின்று காஃபிப் பொடி வாங்கியிருக்கிறீர்களா? அது சேலத்தில் நடக்கும்; ராஜகணபதி அருகே நரசுஸ் காஃபி கம்பெனியில் கொட்டையை அரைத்துக் கொண்டே இருப்பார்கள். சுடச்சுட,மணக்க மணக்க, வரிசையில் நின்று காஃபி பொடி வாங்கி வருவோம். வீட்டில் கொண்டு வந்து டப்பாவுக்குள் போடும் போது வீடே மணக்கும். என் அம்மா சூடாக இருக்கும் அந்த காஃபி பொடியில் இரண்டு சிட்டிகை வாயில் போட்டுக் கொண்ட பிறகுதான் டப்பாவில் போடுவார்.
அப்புறம்  சின்னக் கடைவீதியில் இருக்கும் அந்த AKB மளிகை,OVN மளிகைக் கடைகள் பிரசித்தமானவை. சுத்தமான,நயமான, தரமான பொருள்களைத் தருவார்கள். காலையில் லிஸ்ட்டைக் கொடுத்து விட்டு வந்தால் மாலைக்குள் அவர்களே கூடையில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்து தருவார்கள்.  பொட்டலங்கள் வந்த பேப்பர்கள்,சுற்றி வந்த சணல் சரடுகள் எல்லாம் பின்னால் தேவைப்படும் என்று எடுத்து எரவாணத்தில் வைத்து விடுவோம். அங்கே ஏற்கனவே ஆறுமாதமாக சேர்த்து வைத்திருக்கும் இந்த குப்பைகள் இருக்கும். அரிதாக வரும் பிளாஸ்டிக் கவர்களில் காற்றை ஊதி,இறுக்க மூடிக்கொண்டு,பட்டாஸ் வெடிப்போம்.
பள்ளிக்கூடங்கள் என்று பார்த்தால் பாரதி வித்யாலயா, லிட்டில் ஃப்ளவர்,கோகுலநாத் இவைகள் பிரசித்தம். இறுதி ஆண்டு தேர்வுகளில் ரிசல்ட் வந்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் "அந்தப் பள்ளியில் என்ன ரிசல்ட்" என்று உடனடியாக கேட்போம். ஜங்ஷன் பாரதி வித்யாலயா, சாரதா பெண்கள் பள்ளிகள் எப்போதும் முதலிரண்டு இடங்களில் இருக்கும். மூன்றாவது இடத்திற்குத்தான் பெரும் போட்டி நடைபெறும்.
இரண்டாம் அக்கிரஹாரத்தின் முடிவிலும், சின்னக் கடைத்தெரு தொடக்கத்திலும் வரிசையாக டாக்டர்கள் இருப்பார்கள். ஃபீஸ் ஐந்து ரூபாய். குழந்தைகளின் டாக்டர் பாஸ்கரன், மோகன்ராஜ் தவிர கண் டாக்டர் வாலீஸ்வரன்,ராஜகணபதி அருகே ஒரு ரூபாய் டாக்டர் சுப்பிரமணியன் இவர்களெல்லாம் புகழ் பெற்றவர்கள். விசேஷம் அதில் இல்லை. வாலீஸ்வரன் டாக்டர் செய்யும் சேட்டைகள் மிகவும் தமாஷாக இருக்கும். மூன்று தலைமுறைகளுக்கும் அவர்தான் கண் டாக்டர். உள்ளே போனால் "ராமனாதன் இவருக்கு சொட்டு மருந்து கண்ணில் விடுங்கோ" என்று சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் டீக்கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பார். உள்ளே கண்ணை மூடிக்கொண்டு பேஷண்ட் உட்கார்ந்திருப்பார். " சார், டாக்டர் எப்போ வருவார் சார்" என்றால், ராமனாதன் (அவர்தான் அங்கே கம்பௌண்டர்;சில சமயங்களில் அவரே கண் டாக்டர்!)                " இதோ,இப்ப வந்திருவார்" என்று சொல்லி விட்டு அவர் டீக்கடைக்கு போய் டாக்டர் முன்னால் தலையை சொறிவார்.    " இன்னுமா அவன் உள்ளே இருக்கான்" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வருவார். அது பேஷண்ட் காதிலும் விழும். என்றாலும் இருவரும் கவலைப் பட மாட்டார்கள். "என்ன கண் எரியறதா" என்று கேட்டுக் கொண்டே கண்ணைத் திறந்து பார்ப்பார். பதிலெல்லாம் அவருக்குத் தேவையில்லை. ஆனால் மிகச் சரியான மூக்குக் கண்ணாடி அவரிடம் கிடைக்கும். அந்தத் தெளிவு அவருக்கே உரித்தானது. வாலீஸ்வரன் என்ற பெயரை மறந்தாலும் ராமனாதன் என்ற பெயரை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள். பேஷண்ட் காது பட ஐம்பது முறையாவது டாக்டர் அந்த ராமனாதனை விளிப்பார். எனவே அந்த பெயர் மனதில் நின்று விடும். இன்னும் சேலத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை விசேஷங்கள் அங்கே இருக்கின்றன.
கடைசியாக அந்த ஊர்க் கடவுள் ஈஸ்வரன் பேர் என்ன தெரியுமா? 
*சுகவனேஸ்வரன்*