*சுகவாசிகளின் சேலம்*
சேலம் வாசிகள் சுகவாசிகள். அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பாருங்களேன்; மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் இருந்ததால் அனைத்து பழைய பெரும் நடிகர்களும் நடிகைகளும் சேலத்தைத் தங்கள் தாய்வீடாகவே கொண்டாடினார்கள். கண்ணதாசன் முதல் கலைஞர் வரை, எம்ஜிஆர் முதல் ஜெய்சங்கர் வரை இவர்கள் அத்தனை பேரையும் ஆரம்ப காலத்தில் போஷித்து வளர்த்து விட்டது இங்கிருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ். R S மனோகருக்கு சேலம் என்ற நினைவு வந்தாலே சிரத்தின் மேல் கைகூப்பி வணங்குவார். சேலத்தின் மீது இருந்த பக்தியினால் தன் ஒவ்வொரு புதிய நாடகத்தையும் ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியில் அரங்கேற்றுவார். சொல்லி வைத்தது போல் ஒவ்வொரு நாள் மாலையிலும் மழை கொட்டும்.
மலபார் ஹோட்டலில் பாதாம் ஹல்வா நெய் சொட்டச் சொட்ட ஒண்ணார்ரூபாய்க்குக் கண்ணாடித் தாளில் சுற்றித் தருவார்கள். சின்னப் பிள்ளை போல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் துளித்துளியாக அது தீர்ந்து போகாத வண்ணம் சாப்பிடலாம். எந்த ஹோட்டலிலும் இனிப்பு வாங்கினாலும் கைப்பிடி மிக்ஸரோ,பூந்தியோ வைப்பார்கள். இனிப்பு திகட்டக் கூடாதாம். சேலம் டிஃபன் என்று நினைத்தாலே பாவ்லோவ்வின் நாய் போல நாவில் நீர் ஊறும். எத்தனை வகை!! வெள்ளையப்பம் என்று ஒரு பதார்த்தம். சேலத்தில் மட்டுமே கிடைக்கும். தற்போதைய பணியாரம் சற்றே உசில மணி அளவுக்கு பெரிதானால் அதுதான் வெள்ளையப்பம். சுடச்சுட இலையில் பக்க வெஞ்சனங்களுக்கு நடுவே அது வரும்போது மகாராணி பல்லக்கில் வருவது போல இருக்கும். அதன் உள்ளே முழிச்சு முழிச்சு கடலைப்பருப்பும் தேங்காய்ப் பல்லும் இரண்டொரு மிளகும் கறிவேப்பிலையும் நாவில் தட்டுப்படும் போது மெய் மறந்து கண்கள் சொருகி ஒரு விதமாய் ஆகிவிடும்.
அதைவிடுங்கள். சினிமாவுக்கு என்று கிளம்பி விட்டால் கவலையே கிடையாது. ஏனென்றால் தியேட்டர்கள் வரிசையாக அடுத்தடுத்து இருக்கும். ஒன்றில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்ததில் கிடைக்கும். அவர்களுக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருக்கும். ஒரு தியேட்டரில் படம் ஆரம்பித்த பிறகுதான் அடுத்ததில் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். இதில் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று: நமக்கும் டிக்கெட் கிடைக்கும். இரண்டு: அவர்களுக்கும் மொக்கைப் படமாக இருந்தாலும் கூட்டம் சேரும். சேலத்தில் ஓடாத படம் எப்போதும் இருந்ததில்லை.
காஃபி விஷயத்துக்கு வருவோம். எங்கேயாவது கியூவில் நின்று காஃபிப் பொடி வாங்கியிருக்கிறீர்களா? அது சேலத்தில் நடக்கும்; ராஜகணபதி அருகே நரசுஸ் காஃபி கம்பெனியில் கொட்டையை அரைத்துக் கொண்டே இருப்பார்கள். சுடச்சுட,மணக்க மணக்க, வரிசையில் நின்று காஃபி பொடி வாங்கி வருவோம். வீட்டில் கொண்டு வந்து டப்பாவுக்குள் போடும் போது வீடே மணக்கும். என் அம்மா சூடாக இருக்கும் அந்த காஃபி பொடியில் இரண்டு சிட்டிகை வாயில் போட்டுக் கொண்ட பிறகுதான் டப்பாவில் போடுவார்.
அப்புறம் சின்னக் கடைவீதியில் இருக்கும் அந்த AKB மளிகை,OVN மளிகைக் கடைகள் பிரசித்தமானவை. சுத்தமான,நயமான, தரமான பொருள்களைத் தருவார்கள். காலையில் லிஸ்ட்டைக் கொடுத்து விட்டு வந்தால் மாலைக்குள் அவர்களே கூடையில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்து தருவார்கள். பொட்டலங்கள் வந்த பேப்பர்கள்,சுற்றி வந்த சணல் சரடுகள் எல்லாம் பின்னால் தேவைப்படும் என்று எடுத்து எரவாணத்தில் வைத்து விடுவோம். அங்கே ஏற்கனவே ஆறுமாதமாக சேர்த்து வைத்திருக்கும் இந்த குப்பைகள் இருக்கும். அரிதாக வரும் பிளாஸ்டிக் கவர்களில் காற்றை ஊதி,இறுக்க மூடிக்கொண்டு,பட்டாஸ் வெடிப்போம்.
பள்ளிக்கூடங்கள் என்று பார்த்தால் பாரதி வித்யாலயா, லிட்டில் ஃப்ளவர்,கோகுலநாத் இவைகள் பிரசித்தம். இறுதி ஆண்டு தேர்வுகளில் ரிசல்ட் வந்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் "அந்தப் பள்ளியில் என்ன ரிசல்ட்" என்று உடனடியாக கேட்போம். ஜங்ஷன் பாரதி வித்யாலயா, சாரதா பெண்கள் பள்ளிகள் எப்போதும் முதலிரண்டு இடங்களில் இருக்கும். மூன்றாவது இடத்திற்குத்தான் பெரும் போட்டி நடைபெறும்.
இரண்டாம் அக்கிரஹாரத்தின் முடிவிலும், சின்னக் கடைத்தெரு தொடக்கத்திலும் வரிசையாக டாக்டர்கள் இருப்பார்கள். ஃபீஸ் ஐந்து ரூபாய். குழந்தைகளின் டாக்டர் பாஸ்கரன், மோகன்ராஜ் தவிர கண் டாக்டர் வாலீஸ்வரன்,ராஜகணபதி அருகே ஒரு ரூபாய் டாக்டர் சுப்பிரமணியன் இவர்களெல்லாம் புகழ் பெற்றவர்கள். விசேஷம் அதில் இல்லை. வாலீஸ்வரன் டாக்டர் செய்யும் சேட்டைகள் மிகவும் தமாஷாக இருக்கும். மூன்று தலைமுறைகளுக்கும் அவர்தான் கண் டாக்டர். உள்ளே போனால் "ராமனாதன் இவருக்கு சொட்டு மருந்து கண்ணில் விடுங்கோ" என்று சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் டீக்கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பார். உள்ளே கண்ணை மூடிக்கொண்டு பேஷண்ட் உட்கார்ந்திருப்பார். " சார், டாக்டர் எப்போ வருவார் சார்" என்றால், ராமனாதன் (அவர்தான் அங்கே கம்பௌண்டர்;சில சமயங்களில் அவரே கண் டாக்டர்!) " இதோ,இப்ப வந்திருவார்" என்று சொல்லி விட்டு அவர் டீக்கடைக்கு போய் டாக்டர் முன்னால் தலையை சொறிவார். " இன்னுமா அவன் உள்ளே இருக்கான்" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வருவார். அது பேஷண்ட் காதிலும் விழும். என்றாலும் இருவரும் கவலைப் பட மாட்டார்கள். "என்ன கண் எரியறதா" என்று கேட்டுக் கொண்டே கண்ணைத் திறந்து பார்ப்பார். பதிலெல்லாம் அவருக்குத் தேவையில்லை. ஆனால் மிகச் சரியான மூக்குக் கண்ணாடி அவரிடம் கிடைக்கும். அந்தத் தெளிவு அவருக்கே உரித்தானது. வாலீஸ்வரன் என்ற பெயரை மறந்தாலும் ராமனாதன் என்ற பெயரை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள். பேஷண்ட் காது பட ஐம்பது முறையாவது டாக்டர் அந்த ராமனாதனை விளிப்பார். எனவே அந்த பெயர் மனதில் நின்று விடும். இன்னும் சேலத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை விசேஷங்கள் அங்கே இருக்கின்றன.
கடைசியாக அந்த ஊர்க் கடவுள் ஈஸ்வரன் பேர் என்ன தெரியுமா?
*சுகவனேஸ்வரன்*
No comments:
Post a Comment